search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்"

    அதிக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் அவர்களது பணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த கூளநாயக்கன் பட்டி கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 69 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது-

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பல்வேறு நிலைகளில் முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மாணவர்களின் நலன் முக்கியம். மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. அதிகம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் முதலில் அவர்களது பணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு பணிக்கு திரும்பவேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 9 லட்சத்து 12 ஆயிரத்து 736 குடும்பங்களுக்கு 37 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் ரூ.173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan
    சென்னை:

    கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்தன. வேளாண் பயிர்களும் நாசமடைந்தன.

    தமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

    புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு அறிக்கை அளித்தனர். அதன் பேரில் மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது. ஏற்கனவே மின்சார துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன்சிங்கை சந்தித்து டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டார்.

    இது தொடர்பாக சேத விவரங்களையும், அதற்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் மத்திய மந்திரியிடம் மனு கொடுத்தார்.


    இதனை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி ராதா மோகன்சிங் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிக்காக மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

    இதில் தென்னை மரங்களுக்கு ரூ.93 கோடியும், தோட்ட பயிர் சாகுபடிக்கு ரூ.80 கோடியும் ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்படும் என்று சென்னிமலையில் நடந்த விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
    சென்னிமலை:

    சென்னிமலையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. அதற்கு 85 மருத்துவ குழுக்களை உருவாக்கி சிகிச்சை கொடுத்து தற்போது கோமாரி நோய் கட்டுக்குள் உள்ளது.

    அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் நோய் தாக்குதல் இருந்தது. அங்கும் 50 சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு நோய் கட்டுக்குள் உள்ளது.

    மேலும் நோய் பரவாமல் தடுக்க இன்னும் 15 நாட்களுக்கு கால்நடை சந்தைகள் நடப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் நோய் பரவாமல் தடுக்கப்படும். சத்தியமங்கலம் பகுதியில் நோய் பரவல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.

    ஈரோடு, திருப்பூர் உள்பட 6 மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பாலி கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது கோமாரி நோய் தாக்குதலில் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து வருகிறோம். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

    கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு நிதி கொடுத்த பின்பு விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதியோடு சேர்த்து 20 தொகுதிக்கும் நடைபெறும் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி, கொள்ளும்பாளையம், கோலார்பட்டி ஆகிய பகுதிகளில் ரெயில்வே பாலங்களின் கீழ் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிநிற்கிறது.

    இதனால், அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ரெயில்வே தரைப்பாலத்தை பயன்படுத்துவதில் சிரமம் இருந்துவந்தது. இதனால், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி. ஆகியோர் மழை நீர் தேங்கி உள்ள பாலங்களை பார்வையிட்டனர். அதற்கு பிறகு பாலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,

    அ.தி.மு.க. அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டுவருகிறது. அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறையை பொறுத்தவரை ஏழை எளிய மக்களுக்கு கறவை மாடு, ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயனடைந்துவருகின்றனர். இது போன்று அனைத்து திட்டங்களுக்கும் மக்கள் அங்கீகாரம் வழங்கி வருகின்றனர்.

    எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதியோடு சேர்த்து 20 தொகுதிக்கும் நடைபெறும் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், சந்திரகுமார் உட்பட பலர் இருந்தனர்.
    கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 814 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #UdumalaiRadhakrishnan
    சென்னிமலை:

    சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரன் 115-வது பிறந்த தின விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடிகாத்த குமரன் தனது 28-வது வயதில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களால் தாக்கப்பட்டதால் தான் ஏந்திய சுதந்திர கொடியினை கீழே விழாமல் தாங்கி பிடித்து தேசத்திற்காக தன்னுயிரை நீத்தார்.

    அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம் அமைத்து ஆண்டுதோறும் அரசின் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. கொடி காத்த குமரன் பிறந்த நாளான அக்டோபர் 4-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.

    அதன்படி, 2-வது ஆண்டாக இந்த ஆண்டு சிறப்பான முறையில் கொடிகாத்த குமரன் பிறந்தநாள்விழா நடைபெற்றுள்ளது. மேலும் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நினைவகங்களை திறந்து வைத்துள்ளார்.

    கால்நடைப்பராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புறங்களில் சுமார் 2.50 லட்சம் ஏழை, எளிய, ஆதரவற்ற மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் சுமார் 77 ஆயிரம் பேர் பயனடையவுள்ளனர். கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 814 டாக்டர்கள் நியமனம் செய்ய 1300 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விரைவில் பரிசீலனை செய்து நியமிக்கப்படுவார்கள்.

    காங்கேயம் இன மாடுகளை பராமரிக்கின்ற வகையில், பவானிசாகர் பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையமானது பூமி பூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு, நிலங்கள் சமன் செய்து, தீவன பயிர்கள் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    பர்கூர் மற்றும் தாளவாடி பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் பாலை நல்ல விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    முதல் அமைச்சர் அறிவித்ததுபோல் நொய்யல் ஆறு சீரமைக்கப்பட்டு ஒரத்து பாளையம் அணை பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். #UdumalaiRadhakrishnan
    உடுமலையில் அறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்உடுமலை ராதாகிருஷ்ணன் பேசும்போது,

    அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாமானியரும் முதல்-அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது. பேரறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதிமுக தான் என்றார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொதுகூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    திருப்பூரில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம், திருப்பூர் நொய்யல் ஆறு பகுதியில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக்கும் வகையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் டாக்டர் பழனிசாமி, குணசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் உடுமலை. ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் உள்ளாகின்றோம். தூய்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்றால் ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமான வாழ்க்கையினை நாம் வாழ முடியும். எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    முன்னதாக, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியை அமைச்சர், கலெக்டர் முன்னிலையில் ஏற்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் துணி பைகளை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

    தொடர்ந்து, நொய்யல் ஆற்றை தூய்மைபடுத்தும் பணியினையும் அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் .பிரசன்னா ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செந்தில் விநாயகம், (திருப்பூர் வடக்கு), சண்முகம் (திருப்பூர் தெற்கு), உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் உதய குமார், வனஜா, உதவி பொறி யாளர்கள் லாவண்யா, கார்த்திக், வினோத், பாரதிராஜா, தாசில்தார்கள் ஜெயக்குமார் ( திருப்பூர் வடக்கு), ரவிச்சந்திரன் (திருப்பூர் தெற்கு), சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மின்வாரிய பணிகளை விரைவாக முடித்திட மின்சார வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் - மத்திய அரசின் உதய் மின் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கலெக்டர் பழனிசாமி, செல்வக்குமார சின்னையன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில், இந்திய அரசின் மின் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம், மின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத்திட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் சுமார் ரூ.8.269 கோடியில் செயல்படுத்தவுள்ளது.

    இத்திட்டத்தில் 33 11 கி.வோ. துணைமின் நிலையங்கள், புதிதாக உயரழுத்த மின்பாதைகளும், தாழ்வழுத்த மின்பாதை களும், உயரழுத்த மின்பாதை களை வலுவாக்கல், புதியமின் மாற்றிகள் நிறுவுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாநகராட்சி, காங்கயம், வெள்ளகோவில் நகராட்சிகள், அவினாசி, திருமுருகன்பூண்டி, அன் னூர், ஊத்துக்குளி, முத்தூர், கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், மூலனூர், ருத்ராவதி, கன்னிவாடி, கணியூர், தளி, மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கரமநல்லூர், சாமளாபுரம் பேரூராட்சிகள் பயன்பெற உள்ளன. மேலும், மேற்கொள்ளப்பட உள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவாக முடித்திட மின்சார வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளருக்கான பணிநியமன ஆணையினையும் அவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), நாகராஜன் (கோவை), கரைப்புதூர் ஏ. நடராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், திருப்பூர், பல்லடம், உடுமலை மேற்பார்வை பொறியாளர்கள், வட்ட செயற்பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு டாக்டர்கள் குழு விரைவில் சென்று பணிகள் மேற்கொள்ளும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையில் கலெக்டர் டாக்டர். கே.எஸ். பழனிசாமி, தலைமையில் கால்நடை பரமாரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது,

    அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதனால் அமராவதி அணைக்கு வரப்பெறும் நீரின் அளவு வினாடிக்கு 16,233 கன அடியாக உள்ளது. எனவே அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உடுமலை வட்டத்தில் ஆற்றின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள கல்லாபுரம், எலையமுத்தூர் மற்றும் கொழுமம் ஆற்றோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்காக கல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி , ராஜேஸ்வரி திருமண மண்டபம் கொழுமம் மற்றும் கொழுமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இம்முகாம் மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவம் போன்ற சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கரையோர பகுதியில் உள்ள பொது மக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினரால் பொது மக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் மண்டல துணை வட்டாட்சியர் தலைமையில் 24 மணி நேரமும் தொடர்கண்காணிப்பு பணியில் களப்பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தின் வெள்ள அபாய பகுதிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மேலும், தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையின் படி, கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் மருந்துகள் மற்றும் கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள இணை இயக்குநர் தலைமையில் 25 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு விரைவில் அக்குழுவினர் அங்கு சென்று மருத்துவபணியினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், அமராவதி அணையின் செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி பொறியாளர் சரவணன், குடிமைப் பொருள் வட்டாட்சியர் தயானந்தன், மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனி சாமி முன்னிலையில் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது,

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டம், ஒன்றிய பொது நிதி, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம்,

    கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14 வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் மற்றும் சாக்கடை வசதிகள் ஆகியவை முழுமையாக கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகளில் பேரூராட்சிகளின் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்நிகழ்வின் போது, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர்வி. எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர்ச. பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு ர் ரமேஷ் குமார், குண்டடம் வட்டார வளர்ச்சி மணிகண்டன், கலைச்செல்வி, ருத்ராவதி பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    உடுமலையில் ஸ்டேட் பாங்க் காலனியில் திருட்டு போன 89 பவுன் நகைகளை மீட்ட போலீசாருக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து கவுரவ படுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வருபவர் வெற்றிவேலன் இவர் கடந்த மே மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் சுமார் 22 லட்சம் மதிப்புள்ள 89 பவுன் நகை கொள்ளை போனது . அதன் அடிப்படையில் உடுமலை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் வெற்றி வேலன் என்பவரது வீட்டில் கொள்ளையடித்த ஷாலு என்பவரை கைது செய்து பதுக்கி வைத்திருந்த 89பவுன் தங்க நகைகளையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.

    அதன் அடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் மற்றும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து கவுரவ படுத்தினார். இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தாராபுரத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 16 ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித்திட்டம், ஒன்றிய பொது நிதி, முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம், கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14-வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அமைச்சர் ஊராட்சி வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மூலனூர் ஊராட்சிக்குட்பட்ட 12 ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி., எஸ்.செல்வக்குமார சின்னையன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன் (ஊராட்சிகள்), முருகேசன் (தணிக்கை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன் (தாராபுரம்), அய்யாச்சாமி (மூலனூர்), மாணிக்கம் (மூலனூர்), அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வேளாண்மை துறை அலுவலர் ஞானசேகர், தாசில்தார் சிவக்குமார், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் ,மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் காமராஜ் ஒன்றிய செயலாளர் சின்னப்பன் என்கிற பழனிசாமி முன்னாள் யூனியன் சேர்மன்கள் ரமேஷ் ,செந்தில்குமார் மாவட்ட மகளிர்அணி செயலாளர் ரேவதி குமார் மேலும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்கள்.

    ×